" ஜஸ்ட் சிம்ப்லிஃபை தி திங்க்ஸ் "
இதென்ன உளவியல் சார்ந்த சிந்தனை திடீரென்று, காரணம் ஒரு பள்ளி மாணவன் என்னிடம் கொடுத்த கணக்கிற்கு விடை காண முயன்ற போது இந்த மாதிரியான விஷயங்களை என்னிடத்தில் நானே அடையாளம் கண்டு கொண்டதால் தான்.
"உங்களுக்கு பிராப்ளம்ஸ் சால்வ் பண்றதுல இன்ட்ரெஸ்ட் இருக்கா?"
என்று கேட்டான் அந்த மாணவன்.
"வாழ்க்கைல முக்கால் பாகம் அதுலேயே தான் பா போகுது, உனக்கு என்ன வேணும்"
என்று நான் கேட்டதும் ஒரு கணக்கிற்கு விடையைக் கண்டுபிடிக்குமாறு கூறி இந்தக் கணக்கை என்னிடம் காட்டினான்.
A person who can, within a year, solve the equation ( x^2 - 92y^2 = 1 )is a real mathematician .
- Bhramagupta
என்று கணித மேதை பிரம்மகுப்தர் விடுத்த புதிர் கணக்கிற்கு விடை கண்டுபிடிக்க என்னிடம் கொடுத்து
" அதுல இருக்க மாதிரி உங்களுக்கு ஒன் இயர் டைம், நீங்க அன்ஸர் கண்டுபிடிச்சிட்ட உங்கள நான் டீச்சரா ஏத்துக்கிறேன்"
என்று சவால் விடும் தொனியில் பேசினான், ஆனால் அவன் கண்களில் என்னைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே தெரிந்தது. கால்குலேட்டர், இணையதளம் இவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்பது நிபந்தனைகள். துண்டுக் காகிதத்தை மட்டும் எடுத்துக் கொண்டு விடையைக் கண்டுபிடிக்க முனைந்தேன்.பத்து நிமிடங்கள் கடந்திருக்கும், இருக்கிற சிக்கல்களை எல்லாம் மறந்து ஒரே சிக்கலுக்குள் கவனக் குவிப்புடன் எல்லா வகையிலும் முயற்சித்துப் பார்த்தேன், ஒரு ஆறு வருடத்திற்கு முன்பிருந்த ஒரு மாணவனாக சக மாணவனிடம் போட்டி போடும் மனப்பான்மையில் அப்போது நான் திளைத்திருந்தேன்.
" என்ன அண்ணே தெரியலையா , வாங்க நான் சொல்லித் தரேன்"
என்று பத்து நிமிடங்கள் ஆகி விட்டதை நினைவு படுத்திவிட்டு
" ஒன்னும் இல்ல ஒரு வருஷம் டைம் இருக்கு பொறுமையா பாருங்க, ரொம்ப கஷ்டப் படாதீங்க "
என்று சொல்லி விட்டு அவன் படிக்கும் வேலைகளைப் பார்க்கத் துவங்கினான். அதற்கான விடை எனக்கு அப்பட்டமாகத் தெரிந்தாலும் ஒருவித மிதமிஞ்சிய மேதாவித்தனமும், அளவு மிஞ்சிய சிந்தனையும், கவனச் சிதறல்களும் நம்மை எப்படி ஆட்டுவிக்கின்றன என்பதை அந்தக் கணக்கிற்கு விடையைக் கண்டுபிடித்து முடித்ததும் உணர்ந்து கொண்டேன்.சிக்கலான விஷயத்தை மேலும் சிக்கலாக்க நம்மைத் தவிர வேறு யாராலும் அத்தனை இலகுவாக முடியாது தான் போலும்.
'We just complicate the simple things and complicate the complicated things in our life'
எங்கேயோ படித்த நினைவு அவ்வப்போது வந்து போகிறது. எப்படி எளிமையான ஒன்றை அணுகுவதிலும் சிக்கல்கள் குறித்த மாய பிம்பத்தை, நாமே இக்கட்டான ஒன்றாக அர்த்தம் பண்ணிக் கொண்டு வாழ, எப்படி மனதைப் பழக்கி வைத்திருக்கிறோம் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது. நீங்களும் இந்தக் கணக்கை இந்நேரம் முயற்சித்துப் பார்த்திருக்கலாம்!
இதற்கான விடையைத் தேட நீங்கள் ஆயத்தம் ஆகிவிட்ட பின்... நீங்களும் ஒரு பத்து நிமிடங்கள் இதர சிக்கல்களை விடுத்து கவனத்தைக் குவியிங்கள், விடை, வாழ்வின் இதர சிக்கல்களை களைவதற்கான வழியாகவும் கூட இருக்கலாம்.
(விடையைக் கண்டுபிடித்த பின்னர் நீங்களும் தெரிவிக்கவும்)
Comments
Post a Comment