எங்கே நிம்மதி?



வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு விதமான மனிதர்களைக் காலம் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கும். அந்தந்த நேரங்களில் நமக்கு எது ஒன்றையும் குறித்த புரிதலை மேம்படுத்துவதற்காகவும், ஏதோ ஒன்றை உணர்த்துவதற்காவும், 
வாழ்நிலை மேம்பாட்டிற்கும் காலம் நிகழ்த்தும் ஒரு நிகழ்வு. 
நமது திறமைகளை, நிறைகுறைகளைக் கண்டு சொல்பவர், வழிகாட்டி, முன்மாதிரி என்று பலவிதமான மனிதர்களை நித்தம் சந்தித்த வண்ணம் இருக்கிறோம். இதில் சில மனிதர்கள் நம்மை அறியாமலேயே நமக்குள் ஏற்படுத்திப் போகும் தாக்கம் கவனிக்கத்தக்க ஒன்று. சமீபத்தில் எனக்குப் பரிச்சயமான சில நபர்களிடமிருந்து அந்த மாதிரியான புரிதலையும், சிலவற்றைக் குறித்த பார்வையையும் விசாலப்படுத்திக் கொள்ளமுடிந்தது. அப்படி நான் சந்தித்த ஒருவர் இரயில்வே துறையில் அரசுப் பணியாளராக உள்ளவர், இருந்தும் நூலகத் துறையின் மீது விருப்பம் கொண்டு தொலைநிலைக் கல்வியில் நான் பயிலும் அதே ஆண்டில் என்னோடு வகுப்பிற்கு வந்திருந்தார். அரசுப் பணிக்காக இலட்சக்கணக்கில் பலர் போட்டித் தேர்வுக்குப் பல வருடங்கள் தயாராகிக் கொண்டும், கிடைத்துவிடாதா என்று எதிர்பார்த்திருக்க நீங்கள் அது கிடைத்த பின்பும் நூலகத் துறையை ஏன் தேர்ந்தெடுத்து வந்தீர்கள் என்று நான் கேட்டதற்கு " உண்மைதான், வீட்ல சொல்றாங்கனு UPSC எக்ஸாம்கு படிச்சிட்டு இருந்தேன், அது கிடைக்காதப்போ, RRB ட்ரை பண்ணேன் அதுல இந்த வேலை கிடைச்சது, ஆனா எனக்கு புடிச்சத செய்யிறதுக்கு ஒரு வாய்ப்பு இருக்கும்போது அத விட்டுட்டு அளவுக்கு அதிகமாக ஸ்ட்ரெஸ தலையில ஏத்திக்கிட்டு காசு மட்டும் சம்பாதிச்சு என்ன பண்றது" என்று சொன்னார். இரயில்வே துறையில் உள்ள நூலகப்பிரிவில் பணிமாறுதலுக்காக அவருக்கு விருப்பமான இந்தத் துறையை தேர்ந்தெடுத்துப் படிக்க வந்துள்ளார் என்பது தெரிந்தது. அரசுப்பணி வாழ்க்கையின் குறிக்கோள், இலட்சியம் என்று பலர் ஒருபக்கம் இருந்தாலும் அதை அடைந்தவருக்குத் திருப்தி கிடைத்துவிட்டதா என்று பார்த்தால், அவரும் இன்னும் வேறு ஏதோ ஒன்றைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறார். இதே போல நான் பகுதிநேர ஊழியராகப் பணிபுரியும் நிறுவனத்தில் இது போன்றதொரு அனுபவம் கிடைத்தது. வேலையைச் சரியாகச் செய்தபோதும் மேலாளரிடம் அடிக்கடி திட்டு வாங்கும் ஒரு நபராகவே இன்னும்  அவர் இருக்கிறார். அங்கிருந்து வேறு இடங்களுக்குப் பணிமாறிப்போகும் வாய்ப்பும் அவருக்கு இருந்த போதும் அவர் அதை ஏற்கவில்லை. இது குறித்து அவரிடம் நான் கேட்டபோது "நம்ம வாழ்க்கை ரொம்ப பெருசு, இன்னும் போக வேண்டிய தூரம் இருக்கு, அப்டி இருக்கும்போது இதெல்லாம் பெருசா எடுத்துட்டு தேவையில்லாம நிம்மதிய தொலைக்கணுமா, இப்போ, இன்னைக்கு, நம்ம வேலைய சரியா செய்வோம், கத்துக்குவோம், நல்லா இருப்போம் அவ்ளோதான்" என்று  ஒரு தகப்பன் மகனிடம் சொல்லும் அறிவுரையைப் போலச் சொல்லிமுடித்தார். செய்யும் வேலையும், வகிக்கும் பதவியும் எந்த அளவிற்கு முக்கியமோ, அதே நேரம், இருக்கும் இடத்தில் எவ்வளவு விருப்பத்துடன், மரியாதையுடன், திறமையுடன் அந்த வேலையைச் செய்கிறோம் என்பது அவ்வளவு முக்கியம் என்பதை மெல்லமான வார்த்தைகளால் சொல்லிக் கடந்துவிட்டார். இப்படிப் பரிச்சயமாகும் ஒவ்வொருவரிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள ஏதாவது வாழ்க்கைக் கூறுகள் நிச்சயம் இருக்கும். இங்குத் தாம் விருப்பம் போல் வாழ வேண்டும், நினைத்தது நினைத்த மாத்திரத்தில் கிடைக்க வேண்டும் என்று இருக்கும் மனிதர்களும் உண்டு, அப்படி நிகழாதபோது உடையும் மனங்களும் உண்டு. வாழ்க்கை விருப்பம் போல் அமையாதபோதும் கிடைக்கும் சின்ன சின்ன வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு படிநிலைகளையும் விருப்பமான ஒன்றாக ஏற்றுக்கொண்டு மெல்லிய புன்னகையுடன் கடந்து கொண்டிருக்கும் மனிதர்களும் உண்டு.

எதுவும் எங்கும் போய்விடவில்லை... தொலைவதும் நமக்குள் தான்_ கிடைப்பதும் நமக்குள் தான்.

Comments

Popular posts from this blog

" ஜஸ்ட் சிம்ப்லிஃபை தி திங்க்ஸ் "

லைஃப் அட் பாட்டோம் ஆஃப் தி டாப் Life at bottom of the (spinning) top.