லைஃப் அட் பாட்டோம் ஆஃப் தி டாப் Life at bottom of the (spinning) top.
சரியான பராமரிப்பு இல்லாத இலவச கழிப்பிடத்தின் நாற்றம் வீசிக்கொண்டிருக்கும் இடத்திற்கு அருகில் போதாக் குறைக்குக் குப்பைத் தொட்டியும் சேர்ந்து கொண்டது
" இந்தக் கோவிலுக்கு வந்தாலே இதான் பிரச்சனை, இவ்ளோ பேர் வர இடத்த இப்படி சுத்தம் இல்லாம வச்சிருக்காங்க"
என்று மூக்கை மூடிக் கொண்டு சிடுசிடுவென முணங்கிப் போனார்கள் பலர். அந்தக் கழிவறைக்கு வெளியே நவரத்னநிற பாசிகளையும் , ஸ்படிக மாலைகளையும் விற்றுக் கொண்டிருக்கும் பெண்களிடம் விலையை விசாரித்து பேரம் பேசிக் கொண்டே கழிப்பறைக்குள் செல்வதற்கு வரிசையில் காத்திருந்தார்கள். ருத்ராட்சம், கருங்காலி மாலை, அதை அணிந்து கொள்வதன் மகிமைகளைச் சொல்லி விற்பனைக்கான பேரம் நடந்து கொண்டிருந்தது. மின் விளக்கு ஒன்று மினுக் மினுக்கென்று எரிகையில் அந்தப் பாசிகள் தன்னை அசல் இரத்தினங்களாகப் பரிமாணித்துக் கொண்டிருப்பதை, கோவிலைச் சுற்றி முடித்து அங்கே சில தூரம் தள்ளி உட்கார்ந்து கொண்டு இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.எனக்கு அருகில் எத்தனையோ மக்கள் புரிந்த மொழியிலும் புரியாத மொழியிலும் பேசிக் கொண்டிருந்தனர் அவைகள் வேண்டுதலாகவோ புலம்பலாகவோ இருக்கும் என்பதை மட்டும் உணர முடிந்தது. இப்போது பாசி வாங்க வந்தவர் நாற்பது ரூபாய்க்குப் பேரத்தை முடித்து ஒரு வழியாக ஸ்படிகத்தை வாங்கி விட்டுப்போனார்.
ஒரு பாசியை விற்று முடித்ததும் அந்தப் பெண் அங்கிருந்து குரல் கொடுக்க என் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி அவளுக்கு மறுமொழி சொன்னாள், அந்தப் பெண்ணின் குரல் தன் குழந்தைகள் கூட்டத்தில் தொலைந்து விடாமல் அங்கு இருக்கிறது என்பதை உறுதி செய்து கொள்வதற்காக என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அந்தச் சிறுமியின் கையில் ஒரு சாட்டை; பம்பரம் சுழற்றுவதற்கு, அந்தக் குழந்தைகள் கூட்டத்தில் வேறு எங்கும் போய்விடாமல் இருப்பதற்காக விளையாட்டுக் காட்ட அந்தச் சிறுமி சாட்டையைச் சுழற்றியதும் சுழன்ற பம்பரத்தைப் பிடிக்க பிஞ்சுக் கைகள் ஒன்றுக்கொன்று முந்துவதைப் பார்த்து அவர்களின் கைகளிலும் சுழலவிட்டாள். அலைக்கழிந்து கொண்டிருந்த என் உலகம் அந்தக் குழந்தையின் கையில் சுற்றிய பம்பரத்தின் ஆணிமுனையை மையமாகக் கொண்டு சுழன்றது சில நொடிகள். இந்தப் பாசி விற்பதைத் தொழிலாகக் கொண்ட நரிக்குறவர் சமூக மக்கள் பெரிதாகக் கல்வி, வேலை வாய்ப்புகளைத் தேடுவதற்கில்லை அப்படி ஒரு வழியாகத் தேடினாலும் இன்னும் இடஒதுக்கீட்டு முறைப்படி உரிமைகள் கிடைப்பதற்கான பிரிவில் சாதிச் சான்றிதழ் சரிவர வழங்கப்படாமல் இருப்பதால் கல்வி பயிலும் சொற்ப மாணவர்களும் பொதுத் தேர்வு சமயத்தில் சிரமப்படுவதாகவும் இதனால் கல்வி இடை நிற்றலாகி வந்தவர்கள் பலரென்று அந்தச் சமூக மக்களின் வாழ்வுநிலை குறித்த ஆவணப்படம் ஒன்றை எடுத்த போது அவர்களே நேரடியாகச் சொன்னதாக என் நண்பர் சொன்னார்.
சுற்றி இருந்தவர்களின் வேண்டுதல்களும் புலம்பல்களும் இறைதுதிப் பாடல்களும் நாம கோசங்களும் வியாபார பேரங்களுமென இந்த உலகம் மொத்தமும் அந்தக் குழந்தையின் கையில் சுழன்ற பம்பரத்தைச் சுற்றி இருந்தும் அந்தக் குழந்தைகளின் உலகம் ஆணியின் முனையில் தான் அந்த நொடி; என் உலகமும். கல்வி வாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கப் பெற்றும், வசதிகள் இருந்தும், சின்ன சின்ன கஷ்டத்திற்கு எல்லாம் நிம்மதி தொலைந்துவிட்டது, சிறிய பணம் கஷ்டம் வந்ததும் கோவில் கோவிலாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த மனிதர்களுக்கு மத்தியில் நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத வாழ்க்கையை இன்றும் எங்கோ ஒருவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள், அந்தக் குழந்தைகள் தன் நிலையைக் காரணம் காட்டி தெய்வங்களைச் சபிக்கவில்லை, பெற்றோரை ஏசவில்லை அந்தச் சூழலிலும் சிரிக்க கற்றுக் கொண்டிருக்கிறார்கள். இப்போது மீண்டும் சாட்டை சுழற்றினாள்...
எந்த அதிகாரமும் இல்லாமல்!
Comments
Post a Comment