______சொல்லக்கூடாது !
பள்ளிப்பருவ நாட்களை நினைவுக் கூர்கையில் வருகைப் பதிவேட்டில் உள்ள பெயர்கள் வருகைப் பதிவுக்கு மட்டும் தான் என்று அலட்சியமாக எண்ணிக் கொண்டுதான் இருந்தோம்.ஆனால் இந்தியாவில் பலருக்கு ஒரே மாதிரியான பெயர்கள் ஜோதிட அடிப்படையில் சமற்கிருத மொழியில் தான் சூட்டப்படுகிறது . ஜாதகம் , இராசி , நட்சத்திரம் தீர்மானிக்கிறது பெயர்களை ஆனால் வாழ்நிலை மட்டும் கீழ் மேலாக , கிரகப்பலன்களோ ? நமக்கு அதெல்லாம் வேண்டாம் . சாதாரண பெயர் , பயன்படுத்தும் இடம் பொறுத்து கிளப்பும் பிரச்சினை பற்றி நான் நேரில் கண்ட ஒரு நிகழ்வை மட்டும் சுருக்கமாக சொல்கிறேன் . கோகுல் என்பவர் எனது நண்பர் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை என்னோடே பயின்றவர் . அவன் பக்குவப்பட்ட நபராக தெரிந்தாலும் உண்மை அப்படியில்லை . அவன் வாயால் ஏற்பட்ட வாய்க்கால் தகராறோ ஒன்றா இரண்டா ? . அதே நேரம் பத்தாம் வகுப்பில் பாதியில் வந்து சேர்ந்தார் ,
நாகேந்திரன் என்று ஒரு மாணவன் , சில ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டதால் வேறு பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட மாணவன் இங்கு சேர்ந்தது எப்படி ? (வேறு எப்படி சிபாரிசு தான் ) வேடிக்கை என்னவென்றால் அதே பெயர் கொண்ட ஆசிரியர் தான் அவன் பள்ளியில் சேர சிபாரிசு செய்தவர் . பத்தாம் வகுப்பு ' ஆ ' பிரிவிலும் அதே பெயர் கொண்ட ஒரு மாணவன்... , முன்பே சொன்னேனே ...! இந்தியாவில் பெயர் சூட்டப்படும் முறையை .கோகுலுக்கும் ஆசிரியர் நாகேந்திரனுக்கும் இடையே ஒரு வித பனிப்போர் அவ்வப்போது வகுப்பறையில் நிகழ்வது உண்டு. காரணம் கோகுலின் தந்தை பணிபுரியும் அலுவலகத்தில் அவருக்கு கீழ் பணி புரிபவர் ஆசிரியர் நாகேந்திரனின் மனைவி , சொல்லவா வேண்டும் , வன்மம் கொஞ்ச நஞ்சமா இருக்கும் ? நாட்கள் சென்றன . இப்படியாக சூழ்நிலையிருக்க
ஒரு நாள் உணவு இடைவேளையின் போது நானும் கோகுலும் உணவையும் , உள்ளக் கருத்தையும் பரிமாறிக் கொண்டோம் , உணவில் மட்டும் தான் காரம்குறைவு , விவாதமோ அப்படியாகயில்லை .ஒரு கட்டத்தில் " நாகேந்திரன்னு பேர் வச்சவன் எல்லாம் களவாணிப் பயலா இருக்கான் டா " என்று
' ஆ ' பிரிவு மாணவன் மீதான வெறுப்பைக் கொட்டிவிட்டான் , பள்ளிப்பருவ போட்டி , பொறாமை வழக்கமான ஒன்று தான் . ஆனால் பின் வரிசையில் அமர்ந்திருந்த நாகேந்திரனோ ( புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவன் ) அவனைத் தான் ஜாடையாக சொல்வதாக எண்ணிக் கொண்டு ஆசிரியர் நாகேந்திரனிடம் சற்று திரித்துச் சொல்லவே , பஞ்சாயத்து வைத்தாகிவிட்டது.
ஆசிரியர் நாகேந்திரனோ முகத்தில் காட்டத்தோடு நக்கலாக சொன்னார் " உன்ன மட்டுமில்ல தம்பி , வாத்தியாரயும் மரியாத இல்லாம பேசுறது தான் இவன் பொழப்பே " என்று கூறிவிட்டார் . ஆசிரியர் நாகேந்திரன் மீதும் இது போன்ற சிபாரிசு , பல முறைகேடு புகார்கள் ஏற்கனவே பள்ளி ஆசிரியர்கள் , மாணவர்கள் மத்தியிலும் பல நாட்களாக பேச்சளவில் உலவி வந்தது . குற்றம் உள்ள நெஞ்சம் குறுகுறுத்ததோ என்னவோ ? அவருக்கு.கோகுலுக்கோ ஏதும் புரியாது திகைத்து நின்றான் , கோகுல் யாரைக் குறிப்பிட்டு சொன்னான் , இவர்களுக்கும் பொருந்தித் தான் போகுதே .ஆசிரியர் நாகேந்திரனோ , " நாளைக்கு உங்க அப்பாவ கூட்டிட்டு வா , எல்லாரையும் குறை சொல்றாருல , உன் லட்சணம் என்னன்னு தெரிஞ்சுக்கட்டும் " , "ஒழுக்கம் தான் முதல்ல படிப்பு அடுத்து தான் " வழக்கமான வாசகம் வசைபாட பயன்பட்டது. தவறான புரிதல் என்று சொல்லிவிட முடியாது சாதாரண மனிதன் கொள்ளும் பழியுணர்வே . இதைய காரணமாக வைத்து அவன் தந்தையை அழைத்து சிறுபிள்ளைத்தனமான பிரச்சனையை( personal vengeance என்பர் ) தனிப்பட்ட வன்மத்திற்காக பிரளயம் ஆக்கிவிட்டாரோ ? .
ஆனால் கோகுல் யாரைக் குறிப்பிட்டு சொன்னான் என்று எனக்கே இப்போது பிடிபடவில்லை .
கோகுலின் அந்த எதார்த்த பேச்சு பல கோணங்களில் பொருள் கொள்ளப்பட்டுவிட்டது.
நான் அப்போது கற்றுக் கொண்டேன் . பெயரைக் குறிப்பிடும் போது யார் ? எவர் ? பதவி , ஆதார அட்டை போன்றவற்றை குறிப்பிட்டு தான் பேச வேண்டும் போலும் ! பெயர் சொல்லியது ஒரு குற்றமா..? , உண்மை சொல்லியது குற்...?வேண்டாம் , ______சொல்லக்கூடாது .
Comments
Post a Comment