இந்தக் கடைவீதியில்....
விடியற்காலையில் எழுந்து நடைபயிற்சிக்குச் சென்ற அப்பாவை ஏழு மணி ஆகியும் இன்னும் காணவில்லையென மகன் சுப்ரமணி தாயார் சத்யாவிடம் கேட்க , " உங்க அப்பா கூட இராமலிங்கமும் தான் பா போய்ருக்காரு , ரெண்டு பேரும் ஏதாவது பேசிக்கிட்டு இருப்பாங்க , உனக்கு தெரியாதா உங்க அப்பாவ பத்தி "
பூங்காவிலே நடைபயிற்சிக்குப் பின் இருவரும் செய்தித்தாளைப் படித்து அன்றைய நிகழ்வுகளைப் பற்றி விவாதிப்பது வழக்கமான ஒன்று மனதில் பட்டதைப் பகிரும் அளவிற்கு உரித்தான நண்பர்கள் அவ்வளவு எளிதில் அமைந்துவிடுவதில்லை ; தேடினாலும் கிடைக்காத ஒன்று . இராமலிங்கமும் தட்சிணாமூர்த்தியும் பூங்காவில் கல்லால் ஆன மேசையில் அமர்ந்து புலரும் பொழுதின் புதிய காற்றைச் சுவாசித்தவாறே நீலவானின் திட்டுத்திட்டாக அமைந்த மேகங்களையும் அதன் சாயலையொத்தப் பசும்புல்லின் மேல் படர்ந்த பனித்துளிகளையும் பார்த்து பார்த்து இளைப்பாறினர் இரசித்த வண்ணம் .என்ன லிங்கம் ? அமைதியா இருக்க இன்னைக்கு என்ன செய்தி ? என தட்சிணாமூர்த்தி கேட்டார். செய்திய விடுப்பா இன்னைக்கு வாரமலர் - ல பதிமூனு வயசு பையன் எழுதுன கவிதை ஒன்னு வந்திருக்கு பாரேன் "
"அந்த கவிதை ஒரு மாதிரியான தாக்கத்த எனக்குள்ள குடுத்திருச்சு "
என முகத்தில் ஒரு வித சந்தேகத்தின் ஊடே தேடலின் பதற்றமும் ஆச்சர்யமும் கலந்த உணர்ச்சியோடு சொன்னதும்
" அப்படியென்னப்பா எழுதிருக்கான் ?" என ஆர்வத்தோடு வாங்கிப் படித்தார் தட்சிணாமூர்த்தி .
கவிதையோ
' இந்தக் கடைவீதியில் விற்கப்படும் பொருட்களை வாங்கத்தான் கூசிநிற்கிறேன் _
கல்விச்சாலை
( கல்வி தரத்திற்கேற்ற விலை )'
இதைப் படித்ததும் தட்சிணாமூர்த்தியும் சிந்தித்தார் .
இந்தச் சமூகத்தில் கல்வி என்பது விற்பனை பொருளாகிவிட்ட அவலத்தை சிறு கவிதையில் சொல்லிப்போய்விட்டானே . அதன் தாக்கம் அந்த சிறுவனை எந்த அளவிற்கு பதித்திருக்கும் , அதன் வெளிப்பாடே இந்த கவிதையெனச் சொல்லி இருவருக்கும் இடையேயான கருத்துப் பரிமாற்றம் தொடங்க
" ஒரு காலத்துல மற்ற சமூகத்தினருக்கு படிப்பறிவு கூடாதுனு பார்ப்பனிய ஆதிக்கம் சொன்னத தப்புனு சொல்லிட்டு இன்னைக்கு காசு இருக்கவனுக்கு ஒரு படிப்பு , இல்லாதவனுக்கு அவன் வசதிக்கு கெடைச்சதுதான் படிப்பின்னு சொல்றத என்ன மாதிரி எடுத்துக்குறது லிங்கம் ?"
" நவீனகால ஒடுக்குமுறை ல இதுவும் ஒன்னு தான் பா , காசு இருக்கவன் வாங்கிடுவான் ஆனா எத்தனையோ குடும்பம் ஒவ்வொரு நாளையும் கடக்கரதுக்குள்ள படுர கஷ்டத்தோட கல்விக்கட்டணம் கட்றதுக்கு வழி இல்லாம பிள்ளைகள வேலைக்கு அனுப்பி வைக்கிற அப்பனோட மனக்குமுறல இங்க எத்தன பேர் கண்டுக்குவாங்க"
என பதிலளிக்க
" உண்மைதான் லிங்கம் "
சமூகத்தின் மீதான வீண் குற்றச்சாட்டாக கடந்து போய் விடுவோம் தானே .கல்வியில் முன்னேறிவிட்டோம் , படித்தவர்கள் விகிதாசாரம் அதிகமுள்ள மாநிலம் எனச்சொல்லிச் சொல்லி ஒரு வித மாய தோற்றத்தை உண்டாக்க முயலும் சமூகம் தானே.
"லிங்கம் நம்ம காலம் மாதிரி இல்ல பா , இப்ப வர பிள்ளைகளாச்சும் படிப்ப பொருளாவும் படிக்கிற பிள்ளைகள இன்னும் ஒரு வாடிக்கையாளரா வச்சுருக்காங்கன்னு தெரிஞ்சு ஒரு சின்ன பையன் எழுதிருக்கான்ல "
என தட்சிணாமூர்த்தி சொல்லி முடிக்க இருவரும் வீட்டிற்கு புறப்பட தயாரானார்கள்.
" ஹம்ம்ம்... இதுவும் ஒரு நாள் மாறும் பா , படிப்பயாச்சும் எல்லாருக்கும் சமமா தருவோம்னு எண்ணம் வரணும் " என நிச்சியமற்ற ஒன்று நிகழ்ந்து விடாதா ? என்ற ஏக்கத்தோடு வெளி வந்த வார்த்தைகள் .
இராமலிங்கம் அவரது வீட்டிற்கு சென்றதும் இந்த கருத்து உரையாடல் குறித்த தகவல்களை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். கவிதையின் தாக்கம் அந்த அளவில் பாதித்தது போலும்.
தட்சிணாமூர்த்தி தன் வீட்டின் வாசலில் இருந்த இரும்புக் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டதும்
" அப்பா , தாத்தா வந்துட்டாரு "
என பேரன் சொல்லிக் கொண்டே பள்ளிச் சீருடை அணிந்து வெளியே வந்து நின்றான்.
" வா டா குட்டி "
எனச் சொல்லி பேரனை ஆசையாக அழைத்தார். பின்னேயே அவசரகதியில் மகன்
" ஏன்பா இவ்வளவு நேரம் , சீக்கிரமா வந்துருங்க ரிஷிய ஸ்கூல்க்கு கூட்டிட்டு போகனும்னு சொன்னேன்ல"
" தினமும் லேட் பண்றீங்க , இப்பயாச்சும் போங்க சீக்கிரம் "
எனக் கூறிவிட்டு சுப்ரமணி தன் அன்றாட அலுவலக வேலைகளைச் செய்ய இயந்திர உலகில் சிக்கிய மனிதனாக இயங்கத் தொடங்கினான்.
தன் பேரனைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு பள்ளியின் வாசலில் நின்று பார்க்கையில் தட்சிணாமூர்த்தியின் எண்ணத்தில் ஓடியதாவது தன் மகன் ஒரு நல்ல வேலையில் இருந்தும் அவனால் சில சமயங்களில் ரிஷியின் தொடக்க கல்வி கட்டணத்தையே சமாளிக்க முடியாமல் இருக்க , அன்றாட செலவுக்கே தத்தளிக்கும் குடும்பத்தில் அப்பா தன் குழந்தைக்கு இதே கல்வியை அவ்வளவு எளிதில் வாங்கி கொடுத்துவிட முடியாது தானே
வீட்டிற்கு திரும்புகையில் சாலையோரங்களில் ஒட்டப்பட்டிருந்த விளம்பர பதாகைகளைப் பார்த்தார்
"வித்யாரம்பம் டியூஷன் சென்டர்"
ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை வகுப்புகள் எடுக்கப்படும் என்பதை தூசியால் மலுங்கிய தன் கண்ணாடியைத் துடைத்து விட்டு படித்தவாறே நடக்கலாயினார்.
இதெல்லாம் ஒரு விஷயமா ? என ஒரு எண்ணம் தோன்றலாம் . நாள் முழுதும் அலைந்து திரிந்து உழைக்கும் கூலித் தொழிலாளியின் குடும்பத்தில் உள்ள குழந்தையின் ஏக்கம் ," அப்பா , நாளைக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டிருவாரா மா? தெரிவதில்லை எவருக்கும் . அம்பலம் ஏறாத ஏழையின் சொல் , உணர்வுகள் மட்டும் ஏறிவிடுமா ?
Comments
Post a Comment