" ஸ்விட்ச் ஆஃப் "

தூக்கத்தில் இருந்து எழுந்ததும் 
திடீரென புகைமண்டலமாய்ப் பலவாறான விஷயங்களைப் பற்றிய நினைவுகள் சூழ்ந்திருக்க கண்களில் காரணமின்றி வழிந்த கண்ணீரோடு வெறுமையின் உச்சத்தில் படுக்கையிலேயே உட்கார்ந்திருந்த கரண் -க்கு இனம்புரியாத கவலை , எரிச்சல் , ஏன் இந்தப் பொழுது விடிகிறது? என்பது போலான கோபத்தில் படுக்கையறையை விட்டு வெளியேறினான்.முகம் கழுவிவிட்டு கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தான் தானே மெச்சிக் கொண்டான் , இப்போது எந்த விதமான சோகச் சமிக்ஞையும் தெரியவில்லை .கொஞ்ச நேரத்திற்கு முன் ஏன் அந்த மாதிரியான எண்ணங்கள் வந்தது என்று புரியாமல் நின்றான். குளித்துவிட்டு ஆடை அணிந்த பின் மீண்டும் வந்து கண்ணாடி முன் நின்று பார்க்கையில் சட்டை சுருக்கம் சுருக்கமாக இருப்பதைக் கண்டு தன் வீட்டில் வேலைப் பார்க்கும் வாசுவிடம் கோபித்துக்கொண்டு ஏசினான் . வாசு ஒரு வகையில் கரணின் அம்மா வழி உறவினர். நாற்பது வயது இருக்கும் .

" ஏன் தம்பி இவ்வளவு கோவம் ? , எதுவும் பிரச்சனையா ? "

" உங்க வேலைய ஒழுங்கா பாக்குறதில்ல , பிரச்சனையாம் ? போங்க ணா "

அவரிடம் எப்போதும் மரியாதையாகப் பேசும் கரண் ஏன் இப்படிப் பேசுகிறான் என்று சற்றுக் குழம்பினார்.பைக்கில் ஆஃபீஸ்க்கு போகும் வழியில் தனக்குப் பிடித்தமான பாடல்களை விரும்பிக் கேட்பது வழக்கம்.அப்போது கோவையில் வசிக்கும் கரணின் அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது .

பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு 

" அம்மா , சொல்லுங்க "

"நேத்து நைட் உனக்கு அப்பா கால் பண்ணாராம் நீ எடுக்கல , அதான் நம்ம வாசு அண்ணனுக்கு கால் பண்ணிக் கேட்டேன்
"

" ஒன்னும் இல்லமா, நைட்லாம் தூக்கம் வரமாட்டேங்குது அதான் மாத்திரை போட்டு தூங்கிட்டேன் "

" ஏன் பா ? ஆபீஸ் ல வேலை அதிகமா இருக்கா ? "

" இல்ல மா , இந்த ஒரு வாரமா இப்டி தான் இருக்கு "

என்று சொல்லி முடிக்கும் முன்பே அழைப்பு துண்டிக்கப்பட்டது.
கரண் மீண்டும் தொடர்புகொண்ட போது " ஸ்விட்ச் ஆஃப்" என்று வந்ததும் பிறகு பேசிக் கொள்ளலாமென்று வைத்தான். ஃபோனின் திரையில் தன் முகத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டு ஆஃபீஸுக்கு புறப்பட்டான்.
புத்துணர்ச்சியோடு தான் செய்யும் வேலைகளைத் திறம்படச் செய்வதில் கரணுக்கு அவ்வளவு பிரியம் , எதுவும் நேர்த்தியாகவும் , தெளிவாகவும் இருக்க வேண்டும் .

அதனாலேயே மேலாளர் கிருஷ்ணன் கரணை அடிக்கடி ஊக்குவிப்பதும் , பாராட்டுவதுமாய் இருப்பார். கிருஷ்ணன் வேலையாட்களைச் சரியாகப் புரிந்துகொண்டு வேலை வாங்கிவிடுவதில் கெட்டிக்காரர்.
கரணைச் சரியாகக் கணித்து வேலையை வாங்கி விடுவார் . அதனால் கரணும் சற்றுக் கூடுதல் அக்கறையோடு செய்வான்.

" குட் மார்னிங் சர் " 

என்றான் சிரித்த முகத்தோடு 

" வா கரண் , என்ன இன்னைக்கு ரொம்ப எனர்ஜீடிக்கா இருக்க மாதிரி தெரியுது "

" அப்ப அந்த அசைன்மெண்ட்ட கண்டிப்பா முடிச்சுருப்ப "

அதுவரை மென்மையான வார்த்தைகளால் கரணைப் 
புகழ்ந்தவர் 

" இல்ல சர் "

என்று கரண் சொன்னதும் 

" உன்ன நம்பி 
இன்னைக்கு முடிஞ்சிடும்னு சொல்லிட்டேன் , ஐயோ.. போ பா இங்கிருந்து "

என்று வேலை முடியாததால் கத்தினார்.தன் இடத்தில் வந்து அமர்ந்த கரணுக்கு அந்தக் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்தும் கூட தன் தலையில் மட்டும் உஷ்ணம் கக்குவது போலான உணர்வு

" நான் மட்டும் தான் இங்க வேலை பக்குறேனா , என்ன மட்டுமே கேக்குறான் , இன்னைக்கு ஏன் இப்டி போகுது ?"

என்று சலிப்பாக தனக்குள்ளேயே கேட்டுக் கொள்கிறான்.வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வாசு அண்ணன் வீட்டில் இல்லாததைக் கண்டு

 " எங்க தான் போவாரோ ?" 

வீட்டின் உள்ளே நுழைந்த வாசுவிடம்
 
" எங்க போனீங்க ? "

" நான் ஏற்கனவே சொல்லிருக்கேன்ல தம்பி , என் பையன் கொஞ்ச நாளா சரியில்லாம இருந்தான் , டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனேன் ஏதோ NPD , இன்ஃபீரியாரிட்டி....."


" நிறுத்துங்க , ஏதேதோ கதையெல்லாம் சொல்லாதீங்க , வேலையும் ஒழுங்கா பாக்குறதில்ல "

சிறிது நேரம் கழித்து 

" தம்பி , சாப்பாடு செஞ்சு வச்சிட்டு நைட்டு ஏழு மணிக்கெல்லாம் கெளம்பனும் , பையனுக்கு மருந்து லாம்.... "

தட்டுத் தடுமாறி வார்த்தைகளை கோர்த்துப் பேசினார்.

" ம்ம், போங்க "

 என்று சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்று கதவை வேகமாகச் சாத்திக் கொண்டான்.
'தன்னந்தனியே உட்கார்ந்து ஒன்றாய்க் குவியும் நினைவுகளை எல்லாம் தாங்கும் பலத்தை எல்லோரும் பெற்றுவிடுவதில்லை'காத்தடியின் சத்தமும் இரைச்சலாகிப் போனதால் அணைத்து விட்டு நிசப்தமான அறையில் ஓவியம் வரைவதற்காக தன் வைத்திருந்த பென்சிலின் கூர்மையான முனையை உற்றுப் பார்த்தபோது கரணுக்குத் தோன்றிய எண்ணங்கள் இவை.
கூர்முனையை அழுத்தி உடைத்து விட்ட பின் காகித்தத்தின் மேல் பதிந்த கறுமை , அறையின் இருளோடு காகிதத்தையும் கூட்டிப் போவது போலாக மின் விளக்கை அணைத்து விட்டு உறங்கச் சென்றான்.புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை , அம்மாவிடம் பேசலாம் என்று யோசித்து

" அம்மா, எனக்கு பிடிச்ச வேலையும் , நான் இருக்க இந்த ரூம் கூட எனக்கு
இப்போ பிடிக்கல , வெறுப்பா  இருக்குமா.... "

என்று தழுதழுத்தக் குரலில் சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டு ஃபோனை தரையில் வீசி எறிந்துவிட்டான் .பதறிய கரணின் அம்மா வாசுவிடம் இதுபற்றி  ஃபோனில் சொன்னதும் வாசு உடனே வீட்டிற்கு வந்து அறையைத் திறந்து பார்த்தார் , அறையின் மூலையில் கூனிக் குறுகி இருந்த கரணைக் கண்டதும் 

" என்னாச்சு ஏன் தம்பி அப்டி பேசுனிங்க, அம்மா பதறிட்டாங்க "

கரணை அந்த நிலையில் பார்த்ததும் வாசுவுக்கு புரிந்தது மன அழுத்தம் , NPD போன்ற பாதிப்புகளால் தன் மகனைப் போலவே கரணும் பாதிக்கப்பட்டுள்ளார் என்று ....

மனித மனங்களுக்கும் ஓய்வு தர ஒரு " ஸ்விட்ச் ஆஃப் " முறை சில நேரங்களில் தேவை தான் போலும் !



Comments

Popular posts from this blog

முழுமையற்ற இயற்கையின் முன் ...

துறவிலும் துரத்தும்