உதிரும் மாந்தர்கள்
தினமும் இரவு பதினொரு மணிக்கு மேலும் கூட பச்சை நிற கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள ஒற்றை வீட்டில் மின்விளக்குகளும் , தொலைக்காட்சியும் எப்போதும் இயங்கியவாறே இருக்கும்
‘ நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா ? ‘ என்ற பாடல் தொடங்கி
‘ மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா ? ‘ பாடல் வரை நாளும் ஒலித்துக்கொண்டே இருக்கும் .உடல் மெலிந்த அறுபது வயது மூதாட்டி வெள்ளையம்மாள் பகலெல்லாம் மாடியின் முகப்பில் ( Balcony ) இரும்பு நாற்காலியில் அமர்ந்து வேடிக்கைப் பார்ப்பதும் , பிரகாச வானில் கூடிக் கலையும் மேகங்களின் உருவங்களைக் கண்டும் , பறவைகளையும் பார்த்தவாறே பொழுதைக் கழிப்பார்.இரவில் உறக்கம் பகையாகிப் போக பழைய பாட்டுக்களே துணையாகிப் போகும் போலும் அந்தத் தனிமையின் கைதிக்கு.இவ்வாறாகக் காலம் உருண்டோட வெள்ளையம்மாள் வசிக்கும் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள மாடி வீட்டிற்கு புதிதாக ஒரு குடும்பம் குடி வந்தது. தனசேகர் , மேகலா தம்பதியும் அவர்களது ஒரே மகன் வினோத்தும் தான் அந்தக் குடும்பம்.நாட்கள் செல்ல செல்ல தனசேகரும் , எப்போதும் தனியாகவே அமர்ந்திருக்கும் வெள்ளையம்மாளை கவனிக்கிறார். மேகலாவிடம் இது பற்றி தங்களுக்குள்ளே பேசுகையில்
“ யார் அந்த அம்மா , நான் வேலைக்கு வரும் போதும் போகும் போதும் பாக்குறேன் , தனியா அப்படியே உக்காந்து இருக்காங்க “
“ நானும் விசாரிச்சேங்க அவங்க பேரு வெள்ளையம்மாளாம் , எட்டு வருஷத்துக்கு முன்னாடி இவங்கள பாரமா நினைச்சு மகன் விட்டுட்டு போய்ட்டாராம் , ரொம்ப வருஷமா இங்க தான் தனியா குடியிருக்காங்களாம் “
என்று மேகலா தனசேகருக்குப் பதிலளிக்க ,
“ பாவம் மா , தனியா கஷ்டப்படுவாங்கள “
என்று மகன் வினோத் பரிதாபம் கொள்கிறான் , பத்து வயதுச் சிறுவன் , அம்மாவின் செல்லப் பிள்ளை , இளம்வயதிலேயே அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பக்குவாமான பிள்ளை அவன் .
” ஆமா டா குட்டி , அதுவும் வயசான காலத்துல தனியா இருக்குறது ரொம்ப கஷ்டம் “
என அப்பா சொன்னவுடன் .
“ நா வேணா ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்து பாட்டி கூட இருக்கவா“ எனக் கேட்டதும் அம்மா தன் மகனை எண்ணிப் பூரித்து
“ சரி டா , ஆனா ஹோம்வொர்க்க கரெக்டா முடிச்சிடனும் “
எனச் சொல்லி செல்லமாக வினோத்தின் தலையைக் கோதினார்.பள்ளியிலோ எப்போது பாட்டி வீட்டிற்குச் செல்வோம் என்ற எதிர்பார்ப்போடே இருந்தான் வினோத். மாலை வீட்டிற்கு வந்ததும் தன் பையை வீட்டில் வைத்து விட்டு
“ பாட்டி “ என்று கத்திக் கொண்டே வெளியே அமர்ந்திருந்த வெள்ளையம்மாளை நோக்கி ஓடினான்.முதல் சந்திப்பு அப்போது தான் என்றாலும் தனிமையின் பிடியில் இருந்து சற்றுத் தளர்த்திட , சுருக்கம் நிறைந்த முகத்தில் புன்னகை தவழச் செய்திட வந்த தன் சொந்தப் பேரனாகத்தான் வெள்ளையம்மாளின் மனம் எண்ணியிருக்கக் கூடும் .
” வாயா இராசா , உங்க வீட்ல நீ விளையாடுற சத்தம் இங்க வரை கேக்கும் , அப்பெல்லாம் உன் கிட்ட பேசணும்னு ஆசையா இருக்கும் யா “
என தன் நீண்ட நாள் ஏக்கத்தை கொட்டித் தீர்த்தார்.
இரும்பு நாற்காலியை மடக்கி வீட்டின் மூலையில் தூக்கிப் போட்டுவிட்டு வினோத்துடன் சிரித்து விளையாடி விட்டு பின் இரவிலும் எவ்வித இரைச்சலும் இன்றி அயர்ந்து உறங்கலானார் வெள்ளையம்மாள். நாற்காலி , மின் விளக்குகள் , தொலைக்காட்சி ஆகியனவும் ஓய்வு பெற்றன .மகன் விட்டுப் போன சோகத்தை மெள்ள மெள்ள மறந்து , உடல் மெலிந்து நோய்வாய்ப்பட்டிருந்த பாட்டி
சற்றே உடல்நலம் தேறியிருந்தார். மகிழ்ச்சியும் , சிரிப்பும் அவருக்கு மருந்தாகிப் போக வேறென்ன வேண்டுமாம்.நாட்களும் நகர்ந்து வருடங்காளாகின , இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. வினோத் தினமும் தான் பள்ளியில் கற்கும் விஷயத்தைப் பாட்டியிடம் சொல்வதும் , தன் தரவரிசை அட்டையை ( Rank card ) பாட்டியிடம் காண்பிப்பதும் அதைப் பார்த்து
“ என் பேரனுக்கு அறிவோ அறிவு “ என மெச்சிக் கொள்வதுமாய் இருந்தார்.மேகலாவும் தன் வீட்டில் சமைக்கும் உணவையே வெள்ளையம்மாளுக்கும் கொடுத்து , நேரத்திற்கு மருந்துகளைக் கொடுத்து தன் உறவாகவே பார்த்து வந்தனர் அந்த்க் குடும்பத்தினர்.இப்படியிருக்க ஒரு நாள் வெள்ளையம்மாளின் வீட்டிற்கு தனசேகரும் , மேகலாவும் சென்றனர்.
“ அம்மா , உள்ள வரலாமா ? “என தனசேகர் கேட்க
“ வாப்பா என்ன கேட்டுக்கிட்டு இருக்க “ என உரிமையோடு உள்ளே அழைத்தார். இருவரும் ஏதோ ஒன்றைச் சொல்ல வந்து விட்டு தயங்கி தயங்கி நின்றனர்.
வெள்ளையம்மாள் அப்போது என்ன மன நிலையில் இருந்தாரோ , தழுதழுத்தக் குரலில் கூறியதாவது
“ சேகரு , என் மகன் என்ன தொந்தரவா நெனைச்சு தவிக்க விட்டுட்டு அவன் குடும்பம்னு பாக்கப் போய்ட்டான் , அப்பயே செத்ருவோம்னு நெனைச்சேன் "
" ஆனா செத்தா கூட என்னனு கேக்க நாதியில்லாம போய்ருவோம்னு தான் யா பயந்தேன் “ –
“ இன்னைக்கு எனக்காக அக்கறை படுறதுக்கு , நா செத்தா அழுகுறதுக்கு நீங்க இருக்கீங்கன்னு நெனைக்கும் போது ஆறுதலா இருக்குயா “
அதைக் கேட்டவுடன் சொல்ல வந்ததைச் சொல்ல மனமில்லாமல் , இருவரும் வெள்ளையம்மாளை ஆரத்தழுவி கண்ணீர் சிந்தி வெம்பிப் போயினர்.தனசேகருக்குப் பணியிடமாறுதல் காரணமாக வேறு ஊருக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். தனசேகருக்கும் சரி , மேகலாவிற்கும் சரி , அது பற்றி வாய்திறக்கத் திராணியில்லை. மாலை வீட்டிற்கு வந்த வினோத் இதைக் கேட்டவுடன் என்ன செய்வதென்று தெரியாமல்
“ பாட்டிய நம்ம கூட கூட்டிட்டு போய்ருவோம் பா “ எனச் சொன்னதும்
“ இல்ல பா நீ போய் பாடிக்கிட்ட நாம கிளம்புற விஷயத்தை சொல்லிட்டு வா “
எனக் கூறி அனுப்புகிறார் . பின்னர் மரியாதைக்கு ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வரலாம் என எண்ணி மூவரும் சென்று வெள்ளையமாளிடம் அந்த விஷயத்தைச் சொன்னவுடன் கண்களின் ஓரம் கண்ணீர் சிந்திட , எச்சில் விழுங்குகையில் தொண்டை அடைத்திட
“ திடீர்னு சொல்றீங்க “ எனக் கூறி சில மணித்துளிகள் மௌனமாகத் தரையில் அமர்ந்துவிட்டார்.
” போய்ட்டு வாங்க , எனக்கு... புதுசு இல்ல ; நான் பெத்து வளத்த மகனே பாதியில வீட்டுட்டு போய்ட்டான் - இப்போ நீங்களும்ம்ம்... போறீங்க , இன்னும் எத்தனை வருஷம் இருப்பேன்னு தெரியல “
“ உன் ஃபோன் நம்பர் குடுத்துட்டு போயா சேகரு , எனக்கு ஏதாச்சும் ஒன்னுன்னா உங்களுக்கு தகவல் சொல்றதுக்கு ஆகும்ல “
என திக்கித் தடுமாறி பேசினார். அதைக் கேட்டதும்
“ அப்படியெல்லாம் பேசாதீங்க பாட்டி “
எனக் கூறி வினோத் பீறிட்டு அழுதான். அவர்கள் வீட்டை காலி செய்யும் நாளும் வந்தது.மீண்டும் வீட்டின் மூலையில் மடக்கி வைத்திருந்த இரும்பு நாற்காலியை எடுத்து மாடியின் முகப்பு பக்க இடத்தில் போட்டு அமர்ந்து கொண்டார் , தனிமையின் கைதியாகிப் போனார்.படியில் இறங்கி நடக்க இயலாத காரணத்தால் மேலே அமர்ந்தவாறே போலிச்சிரிப்போடு கையசைத்து வழியனுப்பி வைத்தார் வெள்ளையம்மாள் ,கடைவிழியோரம் வழிந்த கண்ணீர்த்துளிகளைத் துடைத்தவாறே ..!
தனிமையின் கைதி தாக்கத்தை ஏற்படுத்தியது. மென்மேலும் வளர வாழ்த்துகள்.🤝🤝
ReplyDelete