முழுமையற்ற இயற்கையின் முன் ...
பூச்செடியின் அழகைக் கெடுப்பதாக நினைக்கும்
பொழுதுகளில் ஏனோ...
முழுமையற்ற இயற்கையின் முன் இரசனை கெட்டவர்களாகி விடுகிறோம் "
- ச. குரு பிரசாந்
இயற்கையின் அழகு அதன் முழுமையற்ற , பூரணமற்றத் தன்மையில் தான் இருக்கிறது என்பதை உணர்த்தும் இந்தக் கவிதையை நான் எழுதுகையில் சகிப்புத்தன்மையையும் , சகமனிதச் சிநேகத்தையும் இந்த இயற்கைச் சூழலும் , நாகரிகங்களும், பண்பாடுகளும் , மதங்களும் அடுத்தடுத்த தலைமுறை மனிதர்களுக்கு (நமக்கு) எந்தெந்த வகைகளில் கற்றுத்தர முயல்கின்றன என்பதைக் குறித்து யோசிக்கும் சமயத்தில் சில நாள்களுக்குப் பிறகு ஒரு ஜப்பானிய தத்துவம் குறித்தான சிறு அறிமுகம் கண்ணில் தட்டியது .
ஜப்பானில் உள்ள சின்னச் சின்ன தீவுகளில் உள்ள கிராம மக்கள் இந்த நவீன உலகிலும் உலகமயமாக்கலுக்குப் பிறகும் கூட தங்களுடைய மரபுகளை , பண்பாட்டை , கலாச்சாரத்தை , மேலும் தங்களுக்கே உரித்தான சடங்குகளைப் பின்பற்றி மதங்களின் ( ஜப்பானியர்கள் பின்பற்றும் மதங்கள் ஷின்டோ , கன்பூசியம், ஜென் )பழமை மாறாமல் அதே சமயத்தில் முற்போக்கான சிந்தனையுடன் பின்பற்றுவது மட்டுமின்றி அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டுசேர்க்க அவர்கள் பின்பற்றும் வழிமுறைகளும் , செயல்களும் தான் தனித்துவமாக இங்குக் கவனிக்கப்பட வேண்டியன. அவர்களின் தத்துவங்களும் , பழக்கவழக்கங்களும் மனிதர்களுடனான தோழமையை , அனைத்தையும் ஏற்றுக்கொள்கிற பக்குவத்தைச் சொல்லி மனதைச் சீராக வைத்து உடல்நலனைப் பேணுவதோடு நீண்ட ஆயுளுக்கும் வழிவகுக்கிறது என்பதை அறியும்போது வியப்பாகத்தான் இருக்கிறது .
வாபி - சபி ( Wabi - sabi )
என்பதுதான் அந்தத் தத்துவம் .
முழுமையற்றத் தன்மையே இயற்கையின் அழகு அதை ஏற்கப் பழகிக்கொண்டு வாழ்க்கை நிலையற்றது என்பதை உணர்ந்து வாழப் பழக வேண்டும் . எல்லாவற்றிலும் முழுமையை எதிர்பார்ப்பது அதிருப்தி ,பொறாமை ,கோபம் ,ஏமாற்றம் போன்ற எதிர்மறை குணங்களுக்கு நம்மை இட்டுச் செல்லும் என்பதைத் தான் இந்தத் தத்துவம் சொல்கிறது. எளிய மக்களுக்கும் விளங்கும்படியாக அமைவதோடு அவர்தம் நடைமுறைக்கும் பொருந்துகிற எதார்த்தமாக ஆக்கியிருப்பதன் மூலம் தத்துவவியலாளர்களின் நுட்பம் புரிகிறது .
நம் தமிழ்ச் சமூகித்தில் இத்தகு தத்துவங்கள் இல்லையா ?
இருக்கிறது !
இதே போலான தத்துவங்களைத் தமிழ்மொழியில் உள்ள குறட்பாக்களிலும் , ஒளவையின் "கொன்றை வேந்தன்" இல் உள்ள முதுமொழிகளிலும் காணலாம் .
" குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை "
( கொன்றை வேந்தன் )
எல்லாரிடத்திலும் முழுமையை எதிர்பார்த்துக் குறைபார்த்துக் கொண்டிருந்தால் சகமனிதர்களிடம் ஆரோக்கியமான உறவை வளர்த்துக் கொள்ள இயலாது .
மேலும்
"குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்"
( குறள் 504 )
நிறை குறைகளைச் சீர்தூக்கிப் பார்த்து ஏற்பதே நலம் அதைவிடுத்து மனிதனிடம் நல்ல குணாதிசயங்களை மட்டும் எதிர்பார்ப்பது முறையன்று என்பதை இந்தப் பாக்களின் வழியில் அறிகையில் ஜப்பானிய தத்துவம் நம்மோடு ஒன்றிப்போவதைப் பார்க்க முடிகிறது .
வாபி - சபி தத்துவத்தின் நீட்சிதான் சகமனிதர்களிடம் நல்லுறவைப் பேணுதலும் வளமான வாழ்விற்கு வழிவகுக்கும் என்பது. அதற்குச் சான்றாக ஜப்பானிய மக்களின் வாழ்நாள் ஆயுளைச் சுட்டலாம் . அவர்கள் தினமும் தெரிந்த , தெரியாத மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டு மகிழ்ச்சியில் லயித்திருப்பதையும் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருப்பதையும் விரும்புகின்றனர்.
இவையும் அந்தத் தத்துவத்தின் கூறுகள் தாம்.
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு .
( குறள் 336 )
நிலையாமை எத்தகைய கசப்பான உண்மை என்பதை அறிந்தும் அதைச் சொல்லும் வள்ளுவரின் பாங்கு எத்தகைய இரசனையோடு இக்குறளில் வெளிப்படுகிறது என்பதைப் பாருங்கள்.
நேற்றைய பொழுது உயிரோடு இருந்தவன் இன்று இல்லாமல் போனான் என்கிற பெருமையை உடையது இவ்வுலகம் . ஜப்பானிய தத்துவம் சொல்லுகிற ஒன்றைத்தான் வள்ளுவரும் சொல்லுகிறார் , தமிழ் மொழியில் பல இடங்களிலும் சொல்லப்படுகிறது பிறகு எது ஜப்பானிய தத்துவத்தை , மக்களைத் தனித்த அடையாளத்தோடு வேறுபடுத்திக் காட்டுகிறது என்பது பின்வருமாறு சொல்லப்படுகிறது .
மரக்கோவில்களும் வீடுகளும் :
மரத்தால் தான் வீடுகளும் கோவில்களும் இன்றளவும் ஜப்பானில் கட்டப்படுகின்றனவாம் ஆனால் அது அவர்களின் கட்டிடக்கலை என்பதோடு மட்டும் கடந்துவிட முடியாது . இந்தத் தத்துவங்களை எல்லாம் ஏட்டளவில் நிறுத்திவிடாமல் அதனை அடுத்த தலைமுறையினர் பின்பற்றிட வழிகோலும் வகையில் இவ்வாறு கட்டப்படுகின்றனவாம் .
அந்த மரக்கோவில்களும் , வீடுகளும் சரி எளிதில் அழியும் தன்மையுடையன இதன் வழி நிலையாமையை உணர்த்துவதோடு , அவை இடிக்கப்பட்டு அடுத்தடுத்த சந்ததியினரால் மீளுருவாக்கம் செய்யப்படும் போது கோவில் சடங்குகள் வெறுமனே வழிபாடு என்ற அளவிலே சுருங்கிவிடாமல் சடங்குகளை மக்களின் உணர்வோடு ஒன்றச் செய்கின்றன . நம்மைப் போலக் கற்கோயில்களைக் கட்டி ஆகம விதிகள் என்று சாக்குகளைச் சொல்லி ஒருசாரார் ஆதிக்கம் புரியும் ஆணவம் அங்கு அறவே தவிர்க்கப்படுகிறது அல்லவா!
மேலும் கைவினைப் பொருள்களைச் செய்யும் கைவினைஞர்களைத்
தாக்குமி ( Takumi ) என்று ஜப்பானிய மொழியில் குறிக்கின்றனர் . அவர்கள் செய்கின்ற பீங்கான் குவளைகளும் , பாத்திரங்களும் பூரணமில்லாத வகையிலே செய்யப்படுமாம் . நேர்த்தியில்லாத தன்மையை இரசிக்கும்படியான சகிப்புத்தன்மையை வளர்த்திட அதிலும் ஒரு குறியீட்டை வைத்துத் தத்துவத்தைச் சொல்லும் ஜப்பானிய மக்கள் இந்தப் புள்ளியில் தாம் நம்மில் இருந்து தனித்துவம் பெறுகின்றனர் .
" Nature is perfectly imperfect "
போன்ற மேற்கத்தியக் குறிப்புகளும் இதையே சொல்லுகின்றன .
ஸ்டாய்க் தத்துவமும் (Stoicism)
கூட இதனை அடிப்படையாகக் கொண்டு தோன்றியவை தான் . இப்படி ஒப்புமையான கருத்துக்கள் தத்துவங்கள் எல்லா மொழிகளிலும் விரவிக்கிடகின்றன இருந்தும் உலகமயமாக்கலில் பலதரப்பட்ட கலாச்சாரத்தின் கலவைகள் வாழ்க்கை முறைகளிலும் , மொழிகளிலும் , தத்துவார்த்த ரீதியிலும் மாறுதல்களை ஏற்படுத்திவிட்ட போதும் ஜப்பானிய மக்களின் பழமை மாறாத முற்போக்கான தத்துவங்களும் பண்பாடும் இன்றும் வளமான சமூக ஒற்றுமைக்கும், ஆரோக்கிய வாழ்விற்கும் வழிவகுத்து நிலைத்திருக்கிறது . இப்படியான நடைமுறைப் படுத்தப்பட்டத் தத்துவங்களும் , சிந்தனைகளும் தான் தனிமனித ஒழுக்கத்தை , பக்குவத்தைச் சொல்லி மாற்றத்தை உண்டாக்கிச் சமூகத்தில் பெரும் மாற்றத்தை உண்டாக்க வல்லது.
முழுமையற்ற இயற்கை தான் நமக்கு வாழக் கற்றுக்கொடுக்கிறது என்பதைத் தெரிந்து அதை இந்த மாதிரியான தத்துவங்களின் வழியும் மேற்கண்டதைப் போலப் பாக்களின் வழியும் பண்பாட்டின் வழியும் கடத்திவிட முயன்றுள்ளனர் நம் முன்னோர்கள் அனைவரும் , எல்லா இனங்களும் அந்தந்த மண்ணிற்கு ஏற்ற மாதிரியான தத்துவக் கோட்பாடுகளைப் பரப்ப மதங்களையும், சமயங்களையும் முக்கிய வழிமுறையாகக் கொண்டிருப்பதையும் இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டும் எனினும் மனிதகுலத்திற்கு ஒவ்வாத கோட்பாடுகளைக் கொண்டிராத எந்த மதமும் ஊறுவிளைவிக்கும் ஒன்றாகக் கருதப்படுவதில்லை .
Comments
Post a Comment