நாயைப் பார்த்தும் பொறாமையா !?
எழுத்து எப்படி ஒருவரின் உணர்வோடு தொடர்புடையதோ அதே போலத்தான் புகைப்படங்களும் ஓவியங்களும் ஒரு உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்வோடு கொண்டிருக்கும் . அப்படி ஒரு புகைப்படத்தைப் பார்த்ததும் அதனுடனான அல்லது அது குறித்தான நினைவுகள் எல்லோருக்கும் வரத்தான் செய்யும் . மனிதனுக்கு இருக்கிற சுயநலத் தேவைகளின் நினைப்பும் , நாய்க்குத் தனக்கு அன்பானவரிடம் பொழுதைக் கழிக்க வேண்டுமென்கிற நினைப்பும் இந்தப் புகைப்படத்தில் காட்டப்படுகிறது. அப்படியிந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் ருஷ்ய எழுத்தாளர் அந்தோன் சேகவ் எழுதிய சிறுகதையில் ஒரு கதாப்பாத்திரம் பேசுகிற வசனம் தான் நினைவுக்கு வருகிறது .
பனிக்கட்டிகள் உறைந்திருக்கும் அழகிய பொழுதில் முதியவர் ஒருவர் தனக்கென இருக்கும் நிலத்தில் ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்ட வேண்டுமென்கிற ஆவலைத் தனது நண்பரிடம் தெரிவித்து அதில் என்னென்ன மாதிரியான அம்சங்கள் அதாவது ஆய்வகங்கள் , விவசாயம் பற்றிய ஆய்வகம் , இசை , நூலகம் என அனைத்து வசதிகளும் பொருந்திய ஒன்றாக அமைய வேண்டுமென்கிற விளக்கத்தைத் தருகையில் அவர் சொல்கிறார் , எல்லாவற்றையும் குறித்த தெளிவு ஒரு ஆசிரியருக்கு இருக்க வேண்டும் அப்போது தான் நமது ருஷ்ய நாட்டின் கடைக்கோடி விவசாய கிராம மக்களும் கல்வியறிவோடு இன்னும் மேம்பட முடியும் என்கிற போக்கில் உரையாடல் போய்க்கொண்டிருக்கும்.
அப்போது நகைச்சுவை உணர்வோடு இடையில் வருகிற வசனம் தான் என் நினைவுக்கு வந்தது .
" வெட்ககரமானது , ஆனாலும் உண்மை தான் ; நாயைப் பார்த்துப் பொறாமைப்பட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் மிகப் பலரும் "
என்று தனது நண்பரிடம் சொல்கிறார்.
இந்த வரிகள் இத்துணைச் சரளமாக அந்த முதியவரின் வாயில் இருந்து வர வேண்டுமென்றால் எந்த அளவுக்குச் சலிப்புத் தட்டியிருக்கும் இந்த மனிதப் பிறவியின் மீதும் சமூகத்தின் மீதும் , சமூக அவலங்களைக் குறித்தும் . அக்காலத்திய ருஷ்யாவில் ஜார் மன்னர்களின் ஆட்சிக் காலத்தின் கொடுமைகளைச் சேகவ் விவரிக்கும் படியாக இம்மாதிரியான வரிகள் சொல்லப்பட்டிருந்தாலும் , இப்போதும் சுயநலமாக வாழும் நிர்ப்பந்தத்தில் இருக்கும் நம்மைப் போன்ற பொதுப்புத்தி மனிதர்களுக்கும் இந்த வரிகள் நொடிப் பொழுதேனும் உறுத்தலைத் தரத்தான் செய்யும் . அந்தோன் சேகவின் அந்தச் சிறுகதையில் வருகிற வரியின் தாக்கம் நூற்றாண்டுக்குப் பிறகும் பொருந்தும்படியாக , நமது நினைவில் தட்டுபடுகிற அந்தக் கலைஞனின் படைப்பு தான் அவனைக் காலம் கடந்தும் வாழும்படியாகச் செய்கிறது அவன் உணர்வோடு ஒன்றிய எழுத்தோடு இப்போது இந்தப் புகைப்படத்தின் ஊடாக . இந்தப் புகைப்படத்தைப் பார்க்கையில் அந்தோன் சேகவின் அந்த வரிகள் உண்மையென்று தானே தோன்றுகிறது .
Comments
Post a Comment